கோவாக்ஸின் தடுப்பூசியை அவசர காலத் தேவைக்குப் பயன்படுத்துவது குறித்து, உலக சுகாதார அமைப்பு முடிவெடுப்பது மேலும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாரத் பயோடெக்கின் கொரோனா தடுப்பூசியான கோவாக்ஸின், அவசரகால பயன்பாட்டு பட்டியலுக்காக உலக சுகாதார அமைப்பிடம் கடந்த ஏப்ரல் 19ம் தேதி விண்ணப்பித்திருந்தது. கொரோனாவுக்கு எதிராக 77 புள்ளி 8 விழுக்காடு செயல் திறனையும், புதிய டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக 65 புள்ளி 2 விழுக்காடு செயல் திறனையும் கோவாக்ஸின் மருந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், கோவாக்சின் பற்றிய தரவுகளை மதிப்பாய்வு செய்ய உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கூடியது. இதனைத் தொடர்ந்து, கோவாக்ஸின் பயன்பாடு குறித்து கூடுதல் தகவல்களும், விளக்கங்களும் கேட்கப்பட்டுள்ளதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது. நவம்பர் 3ம் தேதி மீண்டும் குழுக் கூட்டம் நடத்தப்படும் என்றும், அப்போது கோவாக்ஸின் மருந்தை அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் கோவாக்ஸின் மருந்தை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிப்பது குறித்த முடிவு மேலும் தள்ளிப் போயுள்ளது. ஃபைசர், அஸ்ட்ராஜெனகா, ஜான்சன் அன்ட் ஜான்சன், மாடர்னா, சீனோஃபார்ம் போன்ற தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே அங்கீகாரம் அளித்துள்ளது .