உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீரில் சிஆர்பிஎஃப் முகாமில் நேற்றிரவு தங்கினார். புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த பாதுகாப்புப் படையினரின் நினைவிடத்தில் இன்று காலை மரியாதை செலுத்தினார்.
புல்வாமாவில் உள்ள சி.ஆர்.பி.எஃப். முகாமுக்குச் சென்ற அமித்ஷா, பாதுகாப்புப் படை வீரர்களுடன் கலந்துரையாடினார். இதனை அடுத்து வீரர்கள் மத்தியில் பேசிய அவர், முகாமுக்கு வந்தது தான் தன்னுடைய முக்கிய நிகழ்ச்சி என்றும், இரவு தங்கி உங்களுடைய பிரச்சனைகளை புரிந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
இதனை அடுத்து வீரர்களுடன் இரவு உணவு அருந்திய அமித்ஷா முகாமிலேயே தங்கினார். இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களின் நினைவிடத்தில் அமித்ஷா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மேலும், வீரமரணமடைந்த வீரர்களின் நினைவாக அவர் மரக்கன்றுகளை நட்டார். நாட்டின் பாதுகாப்பில், வீரர்களின் அர்ப்பணிப்பும், தியாகமும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான உறுதியை மேலும் வலுப்படுத்தும் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.