மகாராஷ்டிராவில் சிறுத்தையை பிடிக்க, கூண்டில் 2 மாதமே ஆன நாய் குட்டி வைக்கப்பட்டதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த நாய்க்குட்டி பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றப்பட்டது.
நாசிக் மாவட்டத்தில் உள்ள இகட்புரி என்ற இடத்தில் ஊருக்குள் சுற்றும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். அதில் 2 மாதமான நாய்க்குட்டி கட்டப்பட்டதை பார்த்து அதிர்ந்த உள்ளூர் மக்களும்,விலங்கு நல அமைப்பினரும் வனத்துறையினரை தொடர்பு கொண்டு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இரண்டு நாட்களாக எந்த உணவுமின்றி அந்த நாய்குட்டி அங்கு கட்டப்பட்டிருந்த நிலையில் அதற்கு உள்ளூர் மக்கள் உணவும், தண்ணீரும் அளித்த பின் வனத்துறையினரை தொடர்பு கொண்டனர். வழக்கமாக கோழி அல்லது ஆடு மட்டுமே இது போன்று கூண்டுக்குள் கட்டப்படும் எனவும் ஏதோ தவறு நடந்துவிட்டதால் நாய்குட்டி கட்டப்பட்டுவிட்டது எனவும் சரக வனத்துறை அதிகாரி விளக்கம் அளித்தார்.
ஆட்கொல்லி விலங்குகளை கவர்ந்து பிடிக்கும் நோக்கில் உயிருள்ள இரைகள் வைக்கப்படும் போது அவை தனிக்கூண்டில் மட்டுமே கட்டப்படும் என்பதால் அவற்றின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என விளக்கம் அளித்த அவர், சிறுத்தையை ஈர்ப்பதற்காக மட்டுமே தனிக்கூண்டில் நாய்க்குட்டி கட்டப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தார்.