உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கோசி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளத்தில் சிக்கிய ஏராளமானோர் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. குமாவோன் மற்றும் நைனிடால் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கோசி உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து ஆறுகளும் அபாய கட்டத்தை எட்டி வெள்ளப் பெருக்கை கொண்டுள்ளன
உத்தரகாண்ட் மழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60க்கும் மேலாக அதிகரித்துள்ளது. குமாவோன் நைனிடால் உள்ளிட்ட பகுதிகளில் 47 பேர் உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினரும் விமானப்படையினரும் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சாமோலியில் வெள்ளத்தில் சிக்கிய பலர் மீட்கப்பட்டனர்
தற்போது வெள்ளம் வடிந்து வருவதாகவும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனிடையே உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். பாதையை அடைத்துள்ள இடிபாடுகளை போர்க்கால அடிப்படையில் நீக்கவும் இதில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.