கறுப்புப் பூனைகள் என அழைக்கப்படும் NSG-யின் 37 ஆவது நிறுவன தினம் இன்று கொண்டாடப்படுகிறது. NSG தீவிரவாதத்தை தடுப்பதற்கு உலக தரத்தில் பயிற்சி பெற்ற படை என உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
2008 மும்பை தாக்குதலின் போது, நாரிமன் ஹவுஸ், ஓபராய் டிரைடன் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் அதிரடியாக புகுந்து, இதர பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து தீவிரவாதிகளை கொன்றதில் கறுப்புப் பூனைகள் முக்கிய பங்கு வகித்தனர்.
தீவிரவாத ஒழிப்பில் முக்கிய பங்காற்றி வரும், NSG-யின் 37 ஆவது நிறுவன தினத்தை ஒட்டி மனேசரில் உள்ள அதன் வளாகத்தில் பல்வேறு சாகச ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்திக்காட்டப்பட்டன.
துப்பாக்கி ஏந்திய தீவிரவாதி போல வேடமிட்ட ஒருவரை NSG யின் சிறப்பு பயிற்சி பெற்ற நாய்கள் லாவகமாக பிடிக்கும் ஒத்திகை காட்சி சுவாரசியமாக இருந்தது..
அதே போன்று கட்டிடம் ஒன்றின் மேற்பகுதியில் NSG கமாண்டோக்கள் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் இறங்கி நடத்தும் பாதுகாப்பு ஒத்திகையும் அனைவரையும் கவருவதாக இருந்தது.
NSG யின் 37 ஆவது நிறுவன தினத்தை ஒட்டி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, தீவிரவாதத்தை தடுப்பதில் NSG உலக தரத்திலான பயிற்சி பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.
தனது இலக்குகளுக்கு ஏற்றவாறு கறுப்புப் பூனைகள் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், அதற்காக இந்தியா பெருமைப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.