சிவில் என்ஜினீயரை வெள்ளையாக ஜொலிக்கவைப்பதாக கூறி ஏமாற்றிய பெண் ஒருவர், அவரை ரிசார்ட்டுக்கு அழைத்துச்சென்று எடுத்த வில்லங்க செல்ஃபி புகைப்படத்துக்கு விலையாக ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு அடுத்த நாகரபாவி பகுதியைச் சேர்ந்தவர் சிவில் இன்ஜினியர் லோஹித். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபோது அங்கு வந்த 2 இளைஞர்கள், தங்கள் நிறுவனத்தின் ஹெர்பல் லைப் பொருட்களை பயன்படுத்தினால் கருமை நிறம் மாறி வெள்ளையாக ஜொலிக்கலாம் எனக்கூறி தங்கள் குழுவை சேர்ந்த இளம்பெண்ணின் போன் நம்பரை கொடுத்துச் சென்றுள்ளனர்.
சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு போன் செய்து ஹெர்பல் பொருட்களை வாங்கும் போது அந்த இளம் பெண்ணிடம் பேசி உள்ளார் லோஹித். தங்கள் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தினால் தன்னை போல தக தகவென்று வெள்ளையாக மின்னலாம் எனக்கூறி அந்த பெண் தனது புகைப்படத்தை சாம்பிலுக்கு அனுப்பி வைத்துள்ளார். அவரது புகைப்படத்தை பார்த்து மயங்கிய லோஹித், அவருடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
இந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறி உள்ளது . அண்மையில் ஒருநாள் இந்த இளம் பெண் லோஹித்தை ,தன்னுடைய கூட்டாளிகளுடன் கனகபுராவில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு லோஹித்துடன் ஒரே அறையில் தங்கி இருந்த அந்த பெண் லோஹித்துடன் நெருக்கமாக இருப்பது போன்று ஏராளமான செல்ஃபி புகைபடங்களை தனது ஸ்மார்ட் போனில் எடுத்துள்ளார். போதையில் இருந்த லோஹித் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது.
சில நாட்களுக்கு பின்னர் லோஹித்தை போனில் அழைத்த அந்த இளம் பெண் மீண்டும் தனிமையில் சந்திக்க வேண்டும் என்று அழைத்துள்ளாள் . அந்தப்பெண்ணை பார்க்கும் ஆவலில் விரைந்து சென்ற லோஹித்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரிசார்ட்டில் எடுத்த வில்லங்கமான செல்ஃபி புகைப்படங்களை காட்டி 1 கோடி ரூபாய் தருமாறு பிளாக் மெயில் செய்துள்ளார். பணம் தரவில்லை என்றால் திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக போலீசில் புகார் அளிப்பேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இது குறித்து என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவித்த லோஹித் , அவமானத்தை பற்றி யோசிக்காமல் நண்பர்களின் அறிவுரைப்படி அன்னபூர்னேஸ்வரி போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஒரு கோடி ரூபாய் பணம் தருவதாக வரவைத்த போலீசார் அந்த இளம்பெண்ணை சுற்றி வளைத்து கைது செய்து செய்தனர். தலைமறைவான அந்த பெண்ணின் கூட்டாளிகள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆணோ பெண்ணோ, அந்தரங்க விவகாரங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டு மிரட்டினால், தக்க ஆதாரத்துடன் காவல்துறையில் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுட்டிக்காட்டும் போலீசார், அதை விடுத்து இது போன்ற மிரட்டலுக்கு எல்லாம் பயந்து பணம் கொடுப்பதையோ, விபரீத முடிகளை மேற்கொள்வதையோ தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.