ஆந்திராவில் பைக் ரேஸிற்கு பயிற்சி எடுத்து மதுரையில் பெண்களிடம் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன், அதிவேக பைக்கில் இருந்து சிலிப்பானதால் வலது கால் முறிந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பெண்களிடம் தாலி சங்கிலிகளை பறித்து சொந்தமாக வீடு கட்டியவனுக்கு, மாவுக்கட்டு போட்டு விட்ட போலீசாரின் மனித நேயம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
மதுரை மாநகர பகுதிகளில் சாலையில் நடந்துசெல்லும் பெண்கள், முதியவர்கள் மற்றும் வாகனத்தில் செல்லும் பெண்களை குறிவைத்து அடுத்தடுத்து வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. குறிப்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் தல்லாகுளம் காவல்நிலையம் முன்பாக இரு சக்கரவாகனத்தில் சென்ற பெண்களிடம் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் காவல்துறையினருக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாநகரில் வழிப்பறியில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வுமேற்கொண்டபோது பைக்ரேசர்கள் அணியக்கூடிய ஹெல்மெட்டை அணிந்த இளைஞர் ஒருவர் ஒரே நாளில் அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் வாகனத்தில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுப்பட்டது தெரியவந்தது.
அவன் அணிந்திருந்த தலைகவசம், பைக்ரேசர்கள் அணியும் வகையை சேர்ந்தது என்பதால் அதனை தடயமாக வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த வைரமணி என்ற 25வயது இளைஞர் வழிப்பறியில் ஈடுபட்டதை உறுதிசெய்த நிலையில், அவனது செல்போன் எண் மூலமாக இருப்பிடத்தை கண்டறிந்து சென்னையில் சுற்றிவளைத்தனர். போலீசாரிடம் தப்பிக்க தனது இரு சக்கரவாகனத்தில் அதிவேகமாக தப்பிச்சென்ற வைரமணியின் போதாதகாலம் அவனது பைக் சிலிப்பானது.
விழுந்த வேகத்தில் வைரமணியின் வலது கால் இரண்டு இடங்களில் முறிந்து போனதாக கூறப்படுகின்றது. கொள்ளையன் என்றாலும் வைரமணியை மனிதாபிமானத்தோடு மீட்ட காவல் துறையினர் அவனுக்கு வலது கால் முழுவதும் மாவுக்கட்டு போட்டு மதுரை அழைத்து வந்தனர்அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வைரமணி மதுரை மாநகரில் மட்டும் 13இடங்களில் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் வைரமணிக்கு உதவிய அவனது நண்பன் பாலசுப்ரமணியனும் கைது செய்யப்பட்டான்.
ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடிய வைரமணி, வழிப்பறி கொள்ளையில் தான் சிறந்தவனாக மாற வேண்டும் என்பதற்காக ஆந்திராவிற்கு சென்று அங்கு பைக் ரேஸ் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளான். ரேஸ்பைக்கில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில் கூட மின்னல் வேகத்தில் ஓட்டும் அளவிற்கு பயிற்சி பெற்றதால் நகையை பறித்த அடுத்த நொடியே கண்மூடி மறைந்துபோகும் அளவிற்கு யாரிடமும் சிக்காமல் தப்பித்து வந்துள்ளான்.
வைரமணி தனது வீட்டில் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிவதாக கூறி அதற்கேற்றாற்போல நாடகத்தை நடத்தியபடியே மதுரையில் பல்வேறு பகுதிகளிலும் செயின்பறிப்பு சம்பவங்களை அரங்கேற்றி வந்துள்ளான். ஊதியம் என்ற பெயரில் வங்கியில் மாதந்தோறும் பணம் செலுத்திவந்த வைரமணி பறித்த தாலி சங்கிலிகளை விற்று 1 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வீடு ஒன்றை கட்டி வந்துள்ளான். கட்டுமான பணி முழுமையாக முடிவடைவதற்குள், முட்டி உடைந்து போலீசில் சிக்கியதால் போலீசார் மாவுக்கட்டு போட்டு விட்டுள்ளனர்.
இதையடுத்து அவனிடமிருந்து 33 லட்சம் ரூபாய் மதிப்பிலான 90பவுன் நகை மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய இரு பைக்குகளையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதனிடையே மாநகரில் மேலும் 8செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய கல்மேடு பகுதியை சேர்ந்த பழனிகுமார் மற்றும் சிவா, விஜய் ஆகிய மூன்றுபேரையும் கைது செய்த போலிசார் அவர்களிடமிருந்தும் 11லட்சம் மதிப்பிலான 30பவுன் நகையையும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
அதே நேரத்தில் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற செயின்பறிப்பு சம்பவத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டுனருடன் தொடர்பு இருப்பது போன்ற வெளியான சிசிடிவி காட்சி குறித்த விசாரணையில் கொள்ளையனுக்கும், ஷேர் ஆட்டோ ஓட்டுனருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.
வைரமணிக்கு போடப்பட்டுள்ள மாவுக்கட்டு, பெண்களின் தாலி சங்கிலிகளை பறிக்க துணியும் ஹெல்மெட் கொள்ளையர்களுக்கு அடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்