பாதுகாப்புத் துறையைச் சார்ந்த 41 படைக்கலன் தொழிற்சாலைகளைப் புதிதாக 7 நிறுவனங்களின் கீழ் கொண்டுவந்த பிரதமர் நரேந்திர மோடி, இவற்றில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
விஜய தசமியையொட்டி டெல்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெற்ற பூசையில் அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது படைக்கலத் தொழிற்சாலை வாரியத்தில் உள்ள 41 படைக்கலன் தொழிற்சாலைகளையும் முற்றிலும் அரசுக்குச் சொந்தமான புதிய 7 நிறுவனங்களின் கீழ் பிரதமர் மோடி கொண்டுவந்தார். காணொலியில் பேசிய பிரதமர், புதிய எதிர்காலத்தைக் கட்டமைக்கப் புதிய தீர்மானங்களை இந்தியா எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
படைக்கலன் தொழிற்சாலைகளை நிறுவனங்களின் கீழ் கொண்டுவரும் முடிவு 20 ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்ததாகத் தெரிவித்தார். இந்த ஏழு நிறுவனங்களும் முப்படைகளிடம் இருந்து 66 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
150 ஆண்டுக்காலப் பழைமை வாய்ந்த இந்தத் தொழிற்சாலைகள் உலகப் போர்க் காலத்தில் மிகவும் ஆற்றல் வாய்ந்தவையாக விளங்கியதையும், திறமையான தொழிலாளர்களைக் கொண்டு வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தி ஆயுதங்களை உற்பத்தி செய்ததையும் குறிப்பிட்டார்.
விடுதலைக்குப் பின் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி இவற்றை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். ஏழு நிறுவனங்களும் ஆராய்ச்சிக்கும் புத்தாக்கத்துக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
வருங்காலத் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்க வேண்டும் என்றும், ஆராய்ச்சியாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 7 நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வரும்படி புதிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.