டெல்லி - அரியானா எல்லையான சிங்குவில் விவசாயிகள் போராட்டம் நடத்துமிடத்தில், இளைஞரின் சடலம் சாலைத் தடுப்புக் கம்பியில் கட்டித் தொங்க விடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரு கைகளும் கால்களும் தடுப்புக் கம்பியில் கட்டப்பட்டு ஒரு கை மணிக்கட்டில் வெட்டித் துண்டிக்கப்பட்ட இளைஞரின் உடல் இன்று அதிகாலை கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அந்த உடலை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதே இளைஞர் உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் தரையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதும், சீக்கியர்களில் ஒரு பிரிவான நிகங்க் என்போர் அவரைச் சுற்றி ஈட்டியுடன் நிற்பதும் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள ஒரு வீடியோவில் தெரியவந்துள்ளது.
சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்தத்தை அந்த இளைஞர் கிழித்தெறிந்ததாகவும், அதற்காக அவரை நிகங்குகள் வெட்டிக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.