100 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் தேசத்தின் எதிர்காலத்தை கட்டமைக்கும் பல்வகைப் போக்குவரத்துத் தொடர்புக்கான தேசியப் பெருந்திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
டெல்லி பிரகதி மைதானத்தில் புதிய பொருட்காட்சித் திடல் கட்டுவதற்கான மாதிரி வடிவத்தைப் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். பிறகு அவர், நூறு இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வகைப் போக்குவரத்துத் தொடர்புக்கான தேசியப் பெருந்திட்டத்தையும் தொடங்கி வைத்துப் பேசினார்.
அடுத்த 25 ஆண்டுகளின் வளர்ச்சிக்காக அடித்தளமிட்டுள்ளதாக மோடி தெரிவித்தார். 21ஆம் நூற்றாண்டுக்கான வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்துவதுடன், குறித்த காலத்தில் முடிக்கவும் தேசியப் பெருந்திட்டம் உதவும் எனத் தெரிவித்தார். இதற்கு முன் பணியின் முன்னேற்றம் குறித்த பலகைகளைக் காணும்போது, அது ஒருபோதும் நிறைவடையாது என மக்கள் எண்ணியதாகவும், அது மக்களின் அவநம்பிக்கையைக் காட்டுவதாகவும் தெரிவித்தார்.
அந்த நிலையை இப்போது மாற்றியுள்ளதாகவும், நன்றாகத் திட்டமிடுவதுடன் வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்தி வருவதாகவும் தெரிவித்தார். தரமான உட்கட்டமைப்பு என்பது நீடித்த வளர்ச்சிக்கான ஒரு வழி என்றும், இது பொருளாதாரத்தைக் கட்டமைப்பதுடன், வேலைவாய்ப்பையும் உருவாக்குவதாகத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தேசியப் பெருந்திட்டம் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு வழிகாட்டுவதுடன், அவற்றை விரைவுபடுத்தி முதலீடுகளையும் ஊக்குவிக்கும் எனத் தெரிவித்தார். பிரதமர் மோடியின் தலைமையில், டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாகக் கட்டப்படும் பொருட்காட்சித் திடலில் 2023ஆம் ஆண்டு ஜி 20 நாடுகளின் மாநாடு நடைபெறும் எனக் குறிப்பிட்டார்.