மத்திய அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்திற்கு, மாநில அரசுகள் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருந்தாலும், அவற்றுக்கான நிலக்கரி விநியோகத்தை நிறுத்தவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நிலக்கரி தட்டுப்பாட்டால் அனல் மின் நிலையங்களில் உற்பத்தி தடைபட்டு நாடு தழுவிய அளவில் மின்தடை ஏற்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், கோல் இந்தியா நிறுவனத்திடம் இருந்துதேவையான நிலக்கரியை பெற்றுக்கொள்ளுமாறு கடந்த ஜனவரியில் இருந்தே மாநிலங்களுக்கு நிலக்கரி அமைச்சகம் கடிதம் எழுதினாலும், பல மாநிலங்கள் நிலக்கரியை வாங்கிச் செல்ல முன்வரவில்லை என தெரிவித்துள்ளது.
இப்போதைய நிலைமையை கருதி அடுத்த 5 நாட்களுக்கு தினசரி நிலக்கரி உற்பத்தியை 19 லட்சம் டன்னில் இருந்து 20 லட்சம் டன்களாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 4 நாட்களாக நிலக்கரி இருப்பு அதிகரித்துள்ளதாகவும், ஒரு மாத த்திற்குள் நிலைமை சீரடைந்து விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது