வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடச்சொல்லும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அருள் வந்தது போல ஆவேசமாக சாமி ஆடி விரட்டிய சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
அருந்ததி அனுஷ்கா போல அமர்ந்து கொண்டு ஊசி எல்லாம் தூசி என்பது போல ஆவேசமாக குரல் எழுப்பி அதிகாரிகளை விரட்டும் சம்பவம் கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் வடகேரா தாலுகாவில் உள்ள ஹீலகல் கிராமத்தில் அரங்கேறியுள்ளது..
இந்த கிராமத்தில் வசித்து வரும் மக்களுக்கு தடுப்பூசி போட சென்ற சுகாதாரத்துறையினருக்கு பயந்து அந்த கிராமத்து மக்கள் ஆடிய சாமி ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல..!
கொரோனாவையே விரட்டியாச்சி, அப்புறம் எதுக்கு தடுப்பூசி என்று மெல்லமா கேள்வி கேட்டு தடுப்பூசிக்கு தடை போட்டுள்ளார் இந்த அருள் வாக்கு மூதாட்டி..!
எல்லாவற்றுக்கும் மேலாக அங்கு தலையில் வெள்ளை துணியை கட்டிக் கொண்டு ஓதிக் கொண்டு இருந்த ஒருவரிடம் சென்று தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துச்சொன்ன அதிகாரியை தனது திடீர் ஆவேசக்குரலால் அதிர்ந்தோடச்செய்தார் மாந்த்ரீகர்..!
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் சுற்றித்திரியும் கிராம மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள வைப்பதற்குள் சுகாதாரத்துறையினர் பெரும் பாடுபட்டு வருவதை, இந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
கொரோனாவை வெல்ல பேராயுதம் தடுப்பூசி என்பதால், அதை தயக்கமின்றி அனைவரும் செலுத்திக் கொள்வது அவசர அவசியமாகும். இதன்மூலம் நம்மையும் காத்தி, நம்மை சுற்றியிருப்பவர்கள் காத்திட இயலும் என்பதை அனைவரும் நினைவில் இருத்த வேண்டும்.