மூன்று பிரதமர்கள், இரண்டு முறை கைவிடப்பட்ட திட்டம், பல முறை விற்பனை விதிகள் மாற்றம் என 20 ஆண்டு முயற்சிகளுக்கு பிறகு, ஏர்இந்தியா என்ற மிகவும் சிக்கலான சொத்தை, மத்திய அரசு தனியாருக்கு விற்றுள்ளது. ஏர்இந்தியாவை முழுமையாக விற்றுவிடுவது என்ற முடிவின் மூலம், கழுத்தை சுற்றிய ராஜாளியை இந்திய அரசு எப்படி விடுவித்தது என பார்க்கலாம்...
ஏர்இந்தியாவில் தனியார்மயத்தை அனுமதிக்க, வாஜ்பாய் அரசில் 2001ஆம் ஆண்டில் முதன் முதலில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஏர்இந்தியாவில் 40 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க முடிவெடுக்கப்பட்டது. பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் 40 சதவீத பங்குகளை வாங்க முன்வந்தபோதிலும், உள்நாட்டு பார்ட்னர் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை காரணமாக, பிரிட்டிஷ், பிரான்ஸ், சுவிஸ் கம்பெனிகள் பின்வாங்கின.
இந்தியாவின் இந்துஜா குழுமம் போபர்ஸ் சர்ச்சையில் சிக்கி தகுதிநீக்கம் செய்யப்பட்டது. டாடா-எஸ்ஐஏ நிறுவனம் மட்டுமே எஞ்சிய நிலையில், அதற்கு சாதகமாக விதிகள் வளைக்கப்படுவதாக எழுந்த அரசியல் குற்றச்சாட்டால் ஏர்இந்தியாவை தனியார்மயமாக்கும் முதல் முயற்சி கைகூடவில்லை. அந்த காலகட்டத்தில் கொழும்பு விமான நிலையத்தின் மீது எல்டிடிஈ நடத்திய தாக்குதலால் டாடா எஸ்ஐஏ-வின் விமானம் சேதமடைந்ததும், ஏர்இந்தியா மீதான ஆர்வத்தை அந்நிறுவனம் கைவிட்டதற்கு முக்கிய காரணம்.
வாஜ்பாய், மன்மோகன் சிங்கை தொடர்ந்து பிரதமராக மோடி வந்த பிறகு, 2017-ல் ஏர்இந்தியாவை விற்கும் திட்டம் மீண்டும் முன்வைக்கப்பட்டது. சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் கலையை மத்திய அரசு முயற்சி செய்து பார்க்க உள்ளதாகவும், விமானப் போக்குவரத்து துறையின் அபார வளர்ச்சி காரணமாக, ஏர்இந்தியாவை தனியார்மயமாக்கும் வாய்ப்பை வரலாறு இரண்டாவது முறையாக தங்களுக்கு வழங்கியிருப்பதாகவும் அப்போதையை நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருந்தார்.
தனியார்மயமாக்குவதற்கு வரலாறு வழங்கியுள்ள வாய்ப்பு என அவர் கூறியதற்கு முக்கியமான காரணம், ஏர்இந்தியா மத்திய அரசின் கழுத்தை இறுக்கும் ராஜாளி போல ஆகியிருந்ததுதான். சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியதோடு, ஏர்இந்தியாவை இயக்குவதற்கு மத்திய அரசு தினமும் 20 கோடி ரூபாய் இழப்பை சந்திக்க வேண்டியிருந்தது.
இப்போது விற்றால் 60 ஆயிரம் கோடி ரூபாய் இழப்போடு போய் விடும், தாமதித்தால் ஆண்டுக்கு 7200 கோடி ரூபாய் நட்டத்தையும் சேர்த்து சுமக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உருவானது. இருப்பினும், ஏர்இந்தியாவை விற்கும் இரண்டாவது திட்டத்தில் 76 சதவீத பங்குகளை மட்டுமே தனியாருக்கு கொடுப்பது என 2018-ல் மத்திய அரசு முடிவுசெய்தது.
கடை விரித்தேன் கொள்வார் இல்லை என்ற நிலைதான் மீண்டும் அரசுக்கு உருவானது. அரசே குறிப்பிட்ட அளவு பங்குகளை வைத்துக் கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களை விற்க முன்வருமானால், அந்த டீலில் தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டாது என்பதை புரிந்துகொண்ட அரசு, ஏர்இந்தியாவில் இருந்து முற்றாக விலக முடிவு செய்தததுடன், தனியார்மயமாக்கும் பட்டியலில் உள்ள பிறபொதுத்துறை நிறுவனங்களுக்கும் ஒரு முன்மாதிரியை உருவாக்கியுள்ளது.
ஏர்இந்தியாவை விற்பதற்கு முன்னரே, அந்நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் சொத்துகளை தனிநிறுவனமாக மத்திய அரசு பிரித்துவிட்டது. மும்பை நாரிமன் முனையில், ஏர்இந்தியா தலைமையகமாக இயங்கி வந்த 23 மாடி கட்டிடம் உள்ளிட்டவை அரசு வசமே இருக்கும். பிற பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனையின்போதும் இதே உத்தி பின்பற்றப்படும் என கூறப்படுகிறது.
ஏர்இந்தியாவை விற்கும் முயற்சி வெற்றிபெற்றதற்கு, முற்றாக பங்குகளை விற்க முன்வந்ததும், அதிகாரிகள் செயல்பட முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்ததும் மிகமுக்கிய காரணமாக கூறப்படுகிறது.
கடனை அடைத்து மீள்வதற்கு ஏர்இந்தியாவை விற்பது அவசியம் என்பதை, அரசு தங்களுக்கு தெளிவாக உணர்த்தியிருந்ததாகக் கூறும் அதிகாரிகள், ஏர்இந்தியாவுக்கு உள்ள பெருங்கடன், நட்டத்தில் இயங்கும் நிலை ஆகியவற்றோடு ஒப்பிடும்போது தற்போது முடிந்துள்ள டீல் மிகச்சிறந்த டீல் என்று தெரிவித்துள்ளனர்.