பிஎம் கேர்ஸ் நிதியின் கீழ் நாட்டில் 35 இடங்களில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியாவது திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
கொரோனா இரண்டாம் அலையின்போது ஏற்பட்ட ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் 736 மாவட்டங்களில் ஆயிரத்து 222 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதில் 70 ஆலைகள், பிஎம் கேர்ஸ் நிதியின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நடைபெற்ற நிகழ்வில், பிஎம்கேர்ஸ் நிதியின் கீழ் பல்வேறு மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள 35 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் சென்னையில், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை,ராமநாதபுரம், பரமக்குடி, திருவண்ணாமலை, செய்யாறு அரசு மருத்துவமனைகள் மற்றும் சேலம் மாவட்டம் ஆத்தூர், தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்ததை அடுத்து, அதன் உற்பத்தி 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது எந்த ஒரு நாடும் நினைத்துப்பார்க்க முடியாத சாதனை என்று அவர் கூறினார்.
எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை 6ல் இருந்து 22 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியாவது ஒரு மாவட்டத்தில் இருக்க வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக குறிப்பிட்டார்.
நாட்டில் 93 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதை பெருமிதத்தடன் சுட்டிக்காட்டிய பிரதமர், விரைவில் இந்த எண்ணிக்கையை 100 கோடியை தாண்டும் என்றார்.