சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை, கோல்டன் ஹவர் எனப்படும் முதல் ஒரு மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்து, உயிர் காப்பவர்களுக்கு 5000 ரூபாய் வெகுமதி அளிக்கும் திட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசு தொகை மற்றும் சான்றிதழ் தவிர, தேசிய அளவில் 10 விருதுகளும் வழங்கப்படவுள்ளன. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் பரிசு தொகை மற்றும் சான்றிதழ் பெற்றவர்களில் மிகவும் தகுதியான 10 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டு தலா 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.