பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பல ஆயிரம் கோடி பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாக பண்டோரா பேப்பர்ஸ் என்ற அமைப்பு இணையத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான அரசியல் கட்சித் தலைவர்கள், மன்னர்கள், பிரதமர்கள், அவர்களின் குடும்பத்தினர் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் பல்லாயிரம் கோடிக்கணக்கில் பணம் பதுக்கியிருப்பதாக பண்டோரா பேப்பர்ஸ் என்ற அமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது.
சுமார் 600 செய்தியாளர்களை இணைத்துள்ள இந்த அமைப்பு 14 நிதிச் சேவை அமைப்புகளிடமிருந்து கசிந்த சுமார் ஒரு கோடியே இருபது லட்சம் ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தியது. இதன்படி செக் பிரதமர்,பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், ஜோர்டான் மன்னர் 2 ஆம் அப்துல்லா உள்ளிட்ட 90 நாடுகளைச் சேர்ந்த 330 தலைவர்கள் வெளிநாடுகளில் பல கோடி ரூபாய்கள் பதுக்கி வைத்திருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 500 இந்தியர்களின் பெயர்களும் இதில் வெளியாகியிருப்பதாக கூறப்படுகிறது.
ரஷ்ய அதிபர் புதினின் பெயர் நேரடியாக அடிபடவில்லை என்ற போதும் அவருடைய உதவியாளர்கள் பெயர்கள் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளன.
பண்டோரோ பேப்பர்ஸ் விவகாரத்தில் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் வெளிநாடுகளில் கோடிக் கோடியாக பணம் முதலீடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள சச்சின் டெண்டுல்கரின் வழக்கறிஞர், சச்சினின் முதலீடுகள் வரித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சட்ட விதி மீறல்கள் எதுவும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.