மும்பை அருகே சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் சிக்கிய விவகாரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் கைது செய்யப்பட்டார்.
மராட்டிய மாநிலத்தின் மும்பை அருகே சொகுசுக் கப்பல் ஒன்றில் நேற்று திடீரென போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். மும்பையில் இருந்து கோவாவிற்கு இயக்கப்பட்ட கோர்டிலியா சொகுசு கப்பலில் போதை விருந்து நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலில் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வாங்கடே தலைமையிலான அதிகாரிகள் சொகுசு கப்பலில் விருந்தினர்கள் போல் விஐபி பாஸ்களை எடுத்து பயணித்தனர். எஃப்டிவி சார்பில் நடத்தப்பட்டதாக கூறப்படும் விருந்தில் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் உற்சாகமாக நடனமாடிய நிலையில், போதைப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து களத்தில் இறங்கிய அதிகாரிகள் போதைப் பொருட்களை பறிமுதல் செய்து, கப்பலை மீண்டும் மும்பைக்கே திருப்பினர். பின்னர், பறிமுதலான போதைப் பொருட்கள் தொடர்பாக நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் போதைப் பொருள் உட்கொள்ளப்பட்டதா? என்பதை கண்டுபிடிக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதை அடுத்து ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இரண்டு வாரங்களாக நீடித்த தொடர் விசாரணையின் அடிப்படையில் போதைப்பொருள் விவகாரத்தில் உள்ள பாலிவுட் தொடர்புகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைவர் சத்ய நாராயண் பிரதான் தெரிவித்துள்ளார்.