கிராமங்களில் வீடுகளுக்குக் குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்திற்கான செல்போன் ஆப்பை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் ஊர்ப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் போதிய அளவு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான திட்டம் ஜல் ஜீவன் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
மாநில அரசுகளுடன் இணைந்து 3 இலட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடிநீர் வழங்கல், தூய்மைப் பணிகளுக்கு 15ஆவது நிதிக்குழுவின் மானியமாக ஊராட்சி மன்றங்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு இலட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் செல்பேசிச் செயலியை இன்று தொடக்கி வைத்த பிரதமர் மோடி, ஊராட்சித் தலைவர்கள், குடிநீர் வழங்கல் மற்றும் தூய்மைக்கான குழுக்களுடன் காணொலியில் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் குடிநீருக்கு பெண்கள் அலைந்து திரியும் நேரத்தை குறைக்க ஜல் ஜீவன் திட்டம் உதவும் என்றார். ஜல் ஜீவன் திட்டம் மக்களுக்குக் குடிநீர் வழங்கும் திட்டம் மட்டுமல்லாமல், அதிகாரத்தைப் பரவலாக்குவதற்கான மாபெரும் இயக்கம் எனத் தெரிவித்தார்.
ஜல் ஜீவன் திட்டத்தின் செல்பேசிச் செயலியில் இந்தத் திட்டத்தின் அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ள முடியும் எனத் தெரிவித்தார். நாடு முழுவதும் இரண்டு லட்சம் ஊர்களில் கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுவதாகவும், நாற்பதாயிரம் ஊராட்சிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைத் தடை செய்யத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.