ஏர்இந்தியாவை வாங்கும் ஏலத்தில் டாடா சன்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1932ஆம் ஆண்டில், தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாடாவால் தொடங்கப்பட்ட டாடா ஏர்லைன்ஸ், சுதந்திரத்திற்குப் பிறகு, தேசியமயமாக்கப்பட்டது.
ஏர்இந்தியாவை இயக்க, நாள்தோறும் 20 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகவும், 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்தது.
இதில், அதிக தொகைக்கு கேட்ட டாடா சன்ஸ் வெற்றிபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஒப்பந்தப் புள்ளிகள் ஏற்கப்பட்டு விட்டதாக வெளியான தகவல் தவறு என்றும், அரசின் முடிவு குறித்து உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும் என மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மை துறை செயலர் தெரிவித்துள்ளார்.