ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம் மருத்துவ சேவைகளை நாடு முழுவதும் கொண்டு செல்ல உதவும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் 4 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டுவதற்குப் பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். ஜெய்ப்பூரில் பெட்ரோ கெமிக்கல் தொழில்நுட்ப மையத்தையும் திறந்து வைத்தார்.
அதன் பின் பேசிய அவர், நாட்டின் மருத்துவத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு புதிய நலவாழ்வுக் கொள்கையை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தில் இணையம் மூலம் நல்ல மருத்துவமனைகள், ஆய்வகங்கள், மருந்தகங்களை அறிந்துகொள்ள முடிவதுடன், நோயாளிகளின் மருத்துவ ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.