பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து சித்து ராஜினாமா செய்துள்ளதை காங்கிரஸ் மேலிடம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதற்குப் பதிலாக மாநில காங்கிரஸ் கமிட்டிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்களை தாங்களாகவே தீர்த்துக் கொள்ளுமாறு மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே, சித்துவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல அமைச்சர்களும் பொதுச் செயலர்கள், பொருளாளர் என முக்கிய கட்சி நிர்வாகிகளும் ராஜினாமா செய்து வருவதால் கலக்கமடைந்துள்ள முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி அவசரம் அவசரமாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி நிலைமையை ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் பட்டியாலாவில் உள்ள சித்துவின் வீட்டுக்கு சில எம்எல்ஏக்கள் சென்று ராஜினாமா முடிவை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தினர்.
சித்துவுடன் ஏற்பட்ட மோதலால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர் சிங், விரைவில் பாஜகவில் சேருவார் என யூகங்கள் வெளியாகிவரும் நிலையில், மாநில காங்கிரஸ் கமிட்டியில் ஏற்பட்டுள்ள குழப்பங்களால் காங்கிரஸ் மேலிடம் கவலை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.