ஐ.நா. பொதுச்சபையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ள நிலையில், இந்தியாவை ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிலையான உறுப்பினர் ஆக்கவும், அணு எரிபொருள் வழங்கும் நாடுகளின் குழுவில் சேர்ப்பதற்கும் அமெரிக்கா ஆதரவளிக்கும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு மூன்று நாள் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் மோடி வெள்ளியன்று வாஷிங்டனில் அதிபர் ஜோ பைடனைச் சந்தித்துப் பேசினார். அப்போது பல்வேறு துறைகளிலும் இருநாடுகள் இடையான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு நடத்தினர்.
இந்தியா அமெரிக்காவின் மிக முதன்மையான கூட்டாளி என்பதால் பாதுகாப்புத் துறையில் அதனுடனான உறவை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தித் தொழில் துறையில் மேலும் ஆழமாக ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இரு தலைவர்களும் வரவேற்றுள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட்டது மிகப் பெருமிதமாக உள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் வெள்ளை மாளிகையில் நடந்த குவாட் தலைவர்கள் மாநாட்டில் பாதுகாப்பான, திறந்த, வெளிப்படையான 5ஜி தொழில்நுட்பத் தொலைத்தொடர்புக் கருவிகளை உறுப்பு நாடுகளுக்குள் உடனடியாக வழங்க உடன்பாடு எட்டப்பட்டது.
5ஜி தொழில்நுட்பத்தைச் சீனா தவறாகப் பயன்படுத்துவதால் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அமெரிக்கா தெரிவித்ததும், 5ஜி தொழில்நுட்பத்தைச் சீன நிறுவனங்களிடம் இருந்து வாங்கிப் பயன்படுத்தக் கூடாது என இந்தியா கட்டுப்பாடு விதித்துள்ளதும் குறிப்பிடத் தக்கது.
வாஷிங்டனில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் சென்றடைந்தார். அங்கு ஐ.நா. தலைமையகத்தில் பொதுச்சபையின் 76ஆவது ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அதில் கொரோனா தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவை குறித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது, ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிலையான உறுப்பினர் பதவி வழங்க அமெரிக்கா ஆதரவளிக்கும் என அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.
இதேபோல அணு எரிபொருள் வழங்கும் குழுவில் இந்தியாவைச் சேர்ப்பது குறித்தும் பைடன் பேசியுள்ளதாக இரு நாடுகளும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.