அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்த பிரதமர் மோடி இருதரப்புகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். கொரோனா காலத்தில் அமெரிக்கா அளித்த உதவிக்காக மோடி நன்றிதெரிவித்தார்.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர்மோடி, அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்தார். இருநாட்டு பிரதிநிதிகள் முன்னலையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, உலகளாவிய மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்களை இருவரும் பரிமாறிக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இந்தியாவும் அமெரிக்காவும் ஒத்த கருத்துடைய நட்பு நாடுகள் என்றும், தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு போன்ற துறைகளில் ஒரேவிதமான ஈடுபாடு கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் பணியாற்றி வருவதாகவும், இரு நாடுகளுக்கும் நட்புப் பாலமாக அவர்கள் விளங்குவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். கோவிட் விவகாரத்தையும் அதன் சவால்களையும் பதவிக்கு வந்ததும் வேகமாக கையாண்ட ஜோ பைடன் அரசுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்ட கமலா ஹாரிஸ், தற்போது வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யும் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்தார்.
முன்னதாக, பேச்சுவார்த்தை நடைபெற்ற வெள்ளை மாளிகையை அடுத்த ஐசனோவர் கட்டடத்தில் மோடியும்- கமலா ஹாரிசும் தனியாக உரையாடினர். இந்தியாவுக்கு வருகை தருமாறு அவருக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். தனது இந்தியப் பூர்வீகத்தையும், முன்னோர்கள் பற்றியும் பிரதமரிடம் கமலா ஹாரிஸ் நினைவுகூர்ந்தார்.