வெள்ளை மாளிகையில் வரும் 24ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், பிரதமர் மோடியும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் சேர்ந்து அமைத்துள்ள குவாட் கூட்டமைப்பு தலைவர்களின் உச்சிமாநாடு வரும் 24ஆம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் மோடி, ஜப்பானிய பிரதமர் யோஷிஹிடே சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோரை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வரும் 24ஆம் தேதி சந்தித்துப் பேசுகிறார்.
இந்த 4 உலகத் தலைவர்களும் முதல்முறையாக ஒன்றாக சந்தித்துப் பேசுவது, சர்வதேச அரசியல் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்புக்கு முன்னதாக, ஜோ பைடனும் பிரதமர் மோடியும் தனியே சந்தித்துப் பேச உள்ளனர். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு, அவரும் பிரதமர் மோடியும் தொலைத்தொடர்பு வசதிகள் மூலம் பல முறை பேசியுள்ளனர் என்றாலும், நேராக சந்தித்துப் பேசுவது இதுவே முதல்முறை.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகும். இதுதவிர, ஆப்கானிஸ்தான் நிலைமை, தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். இந்தியாவுடனான கூட்டுறவை ஜோ பைடன்-கமலா ஹாரிஸ் நிர்வாகம் மேம்படுத்தியிருப்பதாகவும், கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவதிலும், பருவநிலை மாற்ற நெருக்கடிகளை எதிர்கொள்வதிலும் இணைந்து பணியாற்றுவதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.