ஆந்திர ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.
99 சதவிகித மாவட்ட ஊராட்சிகளையும், 90 சதவிகித ஊராட்சி ஒன்றியங்களையும் அந்த கட்சி கைப்பற்றி உள்ளது. சுமார் 550 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கும், சுமார் 8 ஆயிரம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கும் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி தேர்தல் நடந்தது. ஏப்ரல் 10 ஆம் தேதி முடிவுகள் வெளியாக இருந்த நிலையில், தெலுங்கு தேசம் மற்றும் பாஜக தொடர்ந்த வழக்குகளின் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கைக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
கடந்த வியாழக்கிழமை உயர் நீதிமன்ற அமர்வு ஒன்று தடையை நீக்கியதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நேற்று துவங்கியது. சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற ஊராட்சி தேர்தலில் அனைத்து 12 மாநகராட்சிகளையும், 75 நகராட்சிகளில் 74 நகராட்சிகளையும் YSR காங்கிரசே கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.