பஞ்சாப் மாநில முதலமைச்சராக சரண்ஜித் சிங் இன்று பதவியேற்கிறார். 2 துணை முதலமைச்சர்களை நியமிக்கவும் கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.
பஞ்சாபில் முதலமைச்சரை மாற்றக் கோரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 50 பேர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினர். இதையடுத்து முதலமைச்சர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் பதவி விலகினார்.
சண்டிகரில் நேற்று காலை நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சர் யார் என்பதில் ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவராகச் சரண்ஜித் சிங் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
பஞ்சாப் மாநில புதிய முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சரண்ஜித் சிங்குக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங், அவரைத் தேர்ந்தெடுத்தன் மூலம் உடனடி நெருக்கடியை காங்கிரஸ் தவிர்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப் மாநில எல்லைப் பகுதியில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை சரண்ஜித் சிங் திறம்படக் கையாள்வார் என தாம் நம்புவதாக அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.