திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக நியமிக்கத் தான் யாரையும் பரிந்துரைக்கவில்லை எனக் கூறி மத்தியச் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் இதுவரை இல்லா வகையில் 81 பேர் அறங்காவலர் குழுவில் நியமிக்கப்பட்டனர். இதில் ரவி பிரசாத் என்பவரை மத்தியச் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியின் பரிந்துரையின் பெயரில் நியமித்ததாகச் சர்ச்சை எழுந்தது.
இதை மறுத்துள்ள கிஷன் ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்குக் கடிதம் எழுதியுள்ளார். தான் பரிந்துரைத்ததாகக் கூறி அறங்காவலர் குழுவில் சேர்ந்தவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார். இந்த அறங்காவலர் குழுவைக் கலைத்துவிட்டுப் பக்தர்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.