ஸ்விக்கி, ஸோமோட்டா போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர முடிவு எடுக்கப்படவில்லை.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 45ஆவது கூட்டம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலால் காணொலியில் நடைபெற்று வந்த கூட்டம், 20 மாதங்களுக்கு பின் நேரடியாக நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
அதன்படி, தசைநார் சிதைவு நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படும் 16 கோடி ரூபாய் மதிப்பிலான ஜோல்ஜென்ஸ்மா, மற்றும் வில்டெப்சோ ஆகிய இரு மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகளுக்கு அளிக்கப்பட்ட 5 சதவீத ஜிஎஸ்டி சலுகை வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புற்று நோய் தொடர்பான சிகிச்சைக்கு பயன்படும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்திற்கான வலுவூட்டப்பட்ட அரிசி தானியங்களுக்கான ஜிஎஸ்டி 15 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்களின் உதிரி பாகங்களுக்கான ஜிஎஸ்டியும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. டீசலுடன் கலப்பதற்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பயோ டீசலுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்களுக்குப் பதிலாக, ஸ்விக்கி, ஸோமோட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்ததால், கூட்டத்தில் அது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.