பெட்ரோல்- டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மாநில அரசுகளுக்கு, இன்னும் எத்தனை கால அவகாசம் தேவை என்று மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
45-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் இன்று நடைபெறுகிறது. கடந்த 20 மாதங்களில் முதல்முறையாக மாநில நிதி அமைச்சர்கள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நேரடியாக பங்கேற்கின்றனர்
இக் கூட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு கேரளா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநில அரசுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.4 ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல் டீசலை கொண்டு வர முடியாத நிலையில், இன்னும் எத்தனை காலம் அவகாசம் தேவை என்று மாநில அரசுகளிடம் மத்திய அரசு கேட்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஓட்டல்களிலிருந்து வீடுகளுக்கு உணவு 'சப்ளை' செய்யும், நிறுவனங்களை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்து 5 சதவீத வரி விதிப்பது குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனாவுக்கான மருந்துகளின் மீதான வரிச் சலுகையை டிசம்பர் வரை நீட்டிப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட வாய்ப்புள்ளது.