இந்தியாவில் வாகன உற்பத்தி துறையை மேம்படுத்தும் விதமாக, 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து, மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர், அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கினர்.
வாகனம் மற்றும் அதன் உதிரி பாகங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக தயாரிப்புடன் தொடர்புடைய ஊக்கத்தொகை திட்டத்திற்கு 26 ஆயிரத்து 58 கோடி ரூபாய் ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அனுராக்தாகூர் தெரிவித்தார். மின்சாரம் மற்றும் ஹைட்ரஜனில் இயங்கும் வாகன உற்பத்தி ஊக்கப்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் சுமார் ஏழரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மதிப்பிட்டுள்ளதாகவும் அனுராக்தாகூர் தெரிவித்தார்.
டிரோன் உற்பத்தியை ஊக்குவிக்க 120 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.