கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம் விரைவாக மீண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தர்தாம் பவன் திறப்பு விழாவில் பேசிய அவர், கொரோனாவால் இந்தியா உள்பட ஒட்டுமொத்த உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இந்தியப் பொருளாதாரம் பெருந்தொற்றில் தேக்கமடைந்ததைக் காட்டிலும் மிகவும் வலிமையாக மீண்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், பெருந்தொற்று காலத்தில் உலகின் பெரிய பொருளாதார நாடுகளே தங்களைத் தற்காத்துக்கொண்டிருந்த நேரத்தில் நாம் இங்கு சீர்திருத்தங்களை மேற்கொண்டிருந்தோம் என்று குறிப்பிட்டார்.
உலகளாவிய விநியோகச் சங்கிலி தடைபட்டபோது, வாய்ப்புகளை இந்தியாவுக்குச் சாதகமாக்க, உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக பிரதமர் தெரிவித்தார். இந்தத் திட்டம் தற்போது ஜவுளித் துறைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மோடி, சூரத் போன்ற நகரங்கள் அதிகளவில் பயன்பெறும் என்று தெரிவித்தார்.
பொருளாதாரத்தில் முன்னோடி நாடாக திகழ்வதாகக் குறிப்பிட்ட மோடி, இந்தியாவில் வாய்ப்புகளுக்குப் பற்றாக்குறையே இல்லை என்றும் தெரிவித்தார்.