மும்பையில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான பெண் உயிரிழந்த நிலையில், அது தொடர்பாக ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சாகிநாகாவில் 30 வயதுப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து இரும்புக் கம்பியால் குத்திக் காயப்படுத்திச் சாலையில் போட்டுவிட்டுச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று காலையில் அந்தப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். இது மனிதகுலத்துக்கு எதிரான தாக்குதல் எனத் தெரிவித்த முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, வழக்கை விரைந்து விசாரிக்கக் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இது தொடர்பாகப் பேட்டியளித்த மும்பை காவல் ஆணையர் ஹேமந்த் நாக்ராலே, இந்தக் குற்றத்தில் ஒருவனே ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், 45 வயதுள்ள ஒருவனைக் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார். தகவல் அறிந்த பத்து நிமிடத்தில் காவல்துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.