டூப்ளிகேட் சிம் மூலம் நடைபெற்ற பணமோசடியால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு 28 லட்ச ரூபாய் செலுத்துமாறு, வோடஃபோன்-ஐடியா நிறுவனத்திற்கு ராஜஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டில் கிருஷ்ண லால் என்பவரின் வோடஃபோன் எண் வேலை செய்யாததால், புதிய எண்ணைப் பெற்றுள்ளார். அந்த எண்ணும் ஆக்டிவேட் செய்யப்படாததால் பல முறை புகார் அளித்து, கடைசியாக ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அதற்குள் அவரது ஐடிபிஐ வங்கிக் கணக்கில் இருந்து 68.5 லட்ச ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளது.விசாரணையில், கிருஷ்ண லாலுக்கு வழங்கப்பட்ட புதிய எண்ணுக்கு, ஆவணங்களை சரிபார்க்காமல் வேறொரு நபருக்கு டூப்ளிகேட் சிம் வழங்கப்பட்டுள்ளது.
பானு பிரதாப் என்ற அந்த நபர் சிம் மூலம் ஓடிபி எண்ணைப் பெற்று கிருஷ்ண லாலின் பணத்தை வேறு வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளார். அந்த நபர் பின்னர் மொத்த தொகையில் 44 லட்சத்தை மட்டுமே திருப்பித் தந்துள்ளார். இந்நிலையில், மீதத் தொகையை பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு வோடஃபோன்-ஐடியா நிறுவனம் வழங்க வேண்டும் என ராஜஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை உத்தரவிட்டுள்ளது.