என்டிஏ எனப்படும் தேசிய ராணுவ பாதுகாப்பு பயிற்சி அகாடமியில் பெண்களை சேர்த்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முப்படை தளபதிகளின் ஆலோசனையை பெற்ற பிறகு இந்த முடிவு நேற்று எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அளித்த தீர்ப்பில், பெண்களும் என்டிஏ நுழைவுத் தேர்வுகளை எழுதலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்களுக்கு அந்த தேர்வை எழுத அனுமதி மறுப்பது பாலியல் பாரபட்சம் காட்டப்படுவதாகும் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
ராணுவத்திலும், கடற்படையிலும் பெண்களுக்கு நீண்டகால சேவைக்கான நியமனம் வழங்கலாம் என 2020 ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபிறகும் என்டிஏ நுழைவுத் தேர்வு பெண்களுக்கு மறுக்கப்பட்டது குறித்து நீதிபதிகள் அப்போது வியப்பை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், ஐஎம்ஏ, ஓடிஏ போன்று என்டிஏ விலும் இனி பெண்கள் சேரலாம் என்ற இனிப்பான செய்தியை மத்திய அரசு தெரிவித்துள்ளது.