கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுவன் இன்று காலை மரணமடைந்து விட்டதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் இந்த சிறுவன் கடந்த 3 ஆம் தேதி கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
நிபா வைரஸ் பாதிப்பை உறுதி செய்துள்ள மத்திய அரசு, கோழிக்கோட்டிற்கு தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் குழுவை அவசரமாக அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், கேரளாவில் ஒருவருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என கூறியுள்ளார்.
தமிழக எல்லையில் ஏற்கனவே உள்ள கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றார் அவர். கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தமிழகம் வந்தால் கூடுதலாக தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் கூறினார்.
பழந்தின்னி வவ்வால்களின் எச்சில் வாயிலாக நிபா வைரஸ் பரவுவதாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் முதன்முதலாக கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இதுவரை 17 பேர் அதற்கு பலியாகி உள்ளனர்