மும்பை சர்வதேச விமான நிலையத்தின் இண்டாவது டெர்மினலில் நடத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்திகையால் அங்கு பயணிகள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
திடீரென நடத்தப்பட்ட இந்த ஒத்திகையின் ஒரு அங்கமாக பயணிகள் அங்கிருந்து அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பல பயணிகள் விமானத்திற்கு செல்லும் டார்மார்க்கிலும், பேருந்துகளிலும் சுமார் அரை மணி நேரம் சிக்கி செய்வதறியாது திகைத்ததாக கூறப்படுகிறது. ஏசி அணைக்கப்பட்டதால் ஏற்பட்ட அவதியும் பயணிகளை வாட்டியதாக கூறப்படுகிறது.
விமான நிலைய ஊழியர்களும் வெளியேற்றப்பட்ட நிலையில், இது குறித்த தகவல்கள் சமூகதளங்களில் பரவின. இதை அடுத்து இது ஒரு பாதுகாப்பு ஒத்திகை மட்டுமே என்றும் பயணிகள் பீதி அடையத் தேவை இல்லை எனவும் மும்பை போலீசார் தெரிவித்தனர். பாதுகாப்பு ஒத்திகையால் விமானங்களின் புறப்பாடு வருகை போன்ற எதுவும் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.