சமூக வலைதள பயனாளர்களால் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் பதிவிடப்பட்டால் அவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே நீக்கும் வகையிலும், வெளியீட்டு நிறுவனங்களை பாதுகாக்கும் வகையிலும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் கொண்டுவரப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்ட விதிகளை செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு துறை சார்பில் அதன் துணை செயலாளர் அமரேந்தர் சிங் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், நாட்டின் ஒற்றுமை, இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது, அண்டை நாட்டு உறவை சீர்குலைக்கும் தகவலை பகிர்வது போன்ற செயல்பாடுகளை தடுக்கும் வகையிலேயே சட்டம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.