ஆப்கனில் தாலிபன்கள் தலையெடுத்துள்ள நிலையில் அண்டை நாடுகளில் ஒன்று நம்முடன் நிழல் போரை துவக்கி உள்ளதாக, பாகிஸ்தானுக்கு மறைமுகமாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.
ஆனால் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் வைத்து எதிரியை தோற்கடித்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய பாதுகாப்பு படையினர் உறுதியுடன் உள்ளதாக அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டம் உதகைக்கு அருகே வெல்லிங்டனில் உள்ள ராணுவ பணியாளர் கல்லூரியில் பேசிய அவர், குறிப்பிட்ட அண்டை நாடு, தீவிரவாதத்தை தனது அரசு கொள்கையாக வைத்துள்ளது என குற்றஞ்சாட்டினார்.
ஆப்கனில் எற்பட்டுள்ள அரசியல் மாற்றம் இந்தியாவுக்கு ஒரு சவாலாக இருக்கும் என ராஜ்நாத் சிங் கூறினார். அதற்கு ஏற்றவாறு பாதுகாப்பு திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
ஒருங்கிணைந்த போர் குழுக்களை ராணுவத்தில் ஏற்படுத்துவது பற்றி பாதுகாப்பு அமைச்சகம் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.