மத்திய அரசின் தேசிய பணமாக்கும் திட்டத்தை விமர்சித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, 70 ஆண்டுகளாக சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் தொகுதியாக இருந்தும் அமேதியில் ஒரு மாவட்ட அரசு மருத்துவமனை கூட கட்டப்படவில்லையே என கூறியுள்ளார்.
பணமாக்கும் திட்டத்தில் 6 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு கிடைத்து விடுமே என்பதால் தான் காங்கிரசுக்கு வயிறு எரிகிறது என்றும் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் 25 விமான நிலையங்கள், 40 ரயில்வே நிலையங்கள் 15 ரயில்வே ஸ்டேடியங்கள் உள்ளிட்டவற்றில் தனியார் முதலீட்டை பெற அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து கடும் ஆட்சேபங்களை தெரிவித்த ராகுல் காந்தி, காங்கிரசின் நீண்டகால ஆட்சியில் நாட்டில் எதுவுமே செய்யாமல் இருந்திருந்தால் இந்த சொத்துக்கள் உருவாகி இருக்குமா என்ற கேள்வியையும் எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.