ஓணம் பண்டிகையின் முக்கிய நாளான திருவோணம், கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும், மலையாள மக்கள் வசிக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மலையாள மண்ணை ஆண்ட மாவேலி மன்னர் ஆண்டிற்கு ஒருமுறை ஓணம் பண்டிகை அன்று நாட்டு மக்களை சந்திக்க வருவதாக ஐதீகம். இந் திருநாள் ஆவணி மாதம் அத்தம் நட்சத்திரத்தில் துவங்கி திருவோண நட்சத்திரம் வரை பத்து நாட்கள் கொண்டாடபடுகிறது. அன்றைய தினம் வீடுகள் நிறுவனங்கள் அரசு அலுவலகங்களில் அத்தபூ கோலமிட்டு மாவேலி மன்னரை வரவேற்கின்றனர். ஓணம் பண்டிகையின் முக்கிய நாளான திருவோண திருநாள், திருவோண நட்சத்திரத்தமான இன்று கொண்டாடப்படுகிறது.
திருவோணத்தையொட்டி கேரளா எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவில்கள் மற்றும் வீடுகளில் அத்தப்பூ கோலம் போட்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் கோவில் பெண் ஊழியர்கள் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினார். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருவோணம் பண்டிகையை ஒட்டி கோவை சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலுக்கு வெளியே பக்தர்கள் வரிசையில் நின்று சாமிதரிசனம் செய்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், பொது இடங்களில் கூடவோ, ஓணம் தினத்தன்று கோவில்களில் வழிபாடு செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் மலையாள மக்கள் அவரவர் வீடுகளிலேயே பண்டிகையை கொண்டாடினர்.
சேலம் தமிழ் சங்கம் சாலையில் உள்ள கேரள சமாஜத்தில், மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். கொரோனா பரவல் காரணமாக எளிமையாக நடைபெற்ற ஓணம் திருவிழாவில் குறைவானவர்களே பங்கேற்றனர். விழாவிற்கு வந்திருந்த
கேரள பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு, குத்து விளக்கேற்றி வைத்து ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.
திருச்சியில் ஓணம் பண்டிகை எளிமையாக கொண்டாடப்பட்டது. துவாக்குடி மற்றும் திருவரம்பூர் பகுதிகளில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். கொரோனா காலம் என்பதால் ஓணம் பண்டிகை வழக்கமான உற்சாகம் இன்றி எளிமையாக கொண்டாடப்பட்டது.