ஆந்திராவில் ஆற்றில் மணல் அள்ளச் சென்ற லாரிகள், திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. கிருஷ்ணா மாவட்டம் நந்திகாமா ஆற்றில் 70க்கும் மேற்பட்ட லாரிகள் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தன.
நேற்று இரவு புலிசந்தலா அணையின் மதகுகளில் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி அவசர கதியில் அணை திறக்கப்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளம் வருவதை அறியாமல் லாரிகள் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், லாரிகள் செல்வதற்காகப் போடப்பட்டிருந்த பாதையை மூழ்கடித்தவாறு, வெள்ளம் பெருக்கெடுக்கத் தொடங்கியுள்ளது.
இதனால் ஆற்றை விட்டு வெளியேற முடியாமல் 70 மேற்பட்ட லாரிகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டன. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், லாரி ஓட்டுநர்களை படகுகள் மூலம் மீட்டனர். தண்ணீர் வடிந்த பின்னரே லாரிகளை மீட்க முடியும் என போலீசார் தெரிவித்தனர்.