எதிர்க்கட்சி எம்பிக்களின் செயல்பாடு மாநிலங்களவையில் எல்லை மீறி விட்டதாக கூறி அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கண்ணீர் சிந்தினார். மக்களவையிலும் அமளி தொடர்ந்ததால், 2 நாட்கள் முன்னதாகவே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19-இல் தொடங்கியது முதலே, அவையில் பெகாசஸ் செயலி மூலம் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின.
மாநிலங்களவையில் செவ்வாய்கிழமை வேளாண் சட்டங்கள் தொடர்பான விவாதத்தின் போது எதிர்கட்சி எம்பிக்கள் சிலர் அவையின் நடுவில் உள்ள அதிகாரிகளின் மேஜைகளின் மேல் ஏறி நின்றனர். சிலர் மேஜை மீது அமர்ந்து கொண்டு கறுப்புத் துணிகளை வீசியும் கோப்புகளை தூக்கி எறிந்தும் ரகளையில் ஈடுபட்டனர்.
இது குறித்து அறிக்கை ஒன்றை வாசித்த மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மேஜை மீது ஏறி நின்றது மற்றும் அமர்ந்து ஆவணங்களை வீசிய எம்பிக்களின் செயலால் மாநிலங்களவையின் புனிதம் சிதைக்கப்பட்டுள்ளதாக கூறினார். எம்பிக்களின் இந்த செயலை கண்டிக்கவோ அல்லது தனது அதிருப்தியை வெளிப்படுத்தவோ வார்த்தைகளே இல்லை என்றும் தெரிவித்து கண் கலங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மக்களவை 21 மணி நேரம் மட்டுமே செயல்பட்டதாக வேதனை தெரிவித்தார். எதிர்க்கட்சி எம்பிக்களின் கூச்சல் குழப்பத்தால் திட்டமிட்டபடி மக்களவை 96 மணி நேரம் செயல்பட முடியவில்லை என்றார்.
இதனால் 22 சதவீதம் என்ற குறைந்த அளவுக்கே மக்களவையில் அலுவல் நடைபெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார். ஓபிசி மசோதா உள்பட 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.