இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மாநில அரசுகளே முடிவு செய்து இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு கோஷமின்றி நிறைவேறியது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை கண்டறிந்து பட்டியல் தயாரிக்க மாநில அரசுகளுக்கு மீண்டும் அதிகாரம் அளிக்கும் 127-வது சட்டத் திருத்த மசோதாவுக்கு மக்களவையில் முறையான விவாதம் நடத்தப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு கோஷமின்றி மசோதா மீது விவாதம் நடைபெற்றது.
இந்த மசோதா மூலமாக 671 சாதிப் பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டு வாய்ப்புகள் கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் விவாதங்களுக்கு பதில் அளிக்கையில் குறிப்பிட்டார்.மசோதாவுக்கு ஆதரவாக 385 மக்களவை உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், எந்த உறுப்பினரும் மசோதாவை எதிர்க்கவில்லை.
ஓபிசி சமூகத்தினரை அடையாளம் காணும் உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து மத்திய அரசு பறித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்த நிலையில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியதன் மூலம் மீண்டும் மாநில அரசுகளுக்கு இட ஒதுக்கீட்டிற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.