கடல் வழித்தடங்கள் பன்னாட்டு வணிகத்தின் உயிர்நாடிகள் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பன்னாட்டு ஒத்துழைப்புடன் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல் என்னும் தலைப்பில் ஐநா பாதுகாப்புச் சபை காணொலி கலந்துரையாடலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்றார்.
அப்போது பேசிய அவர், புவியின் எதிர்காலத்துக்குப் பெருங்கடல்கள் மிகவும் முதன்மையானவை என்றும், கடற்கொள்ளை, பயங்கரவாதம் ஆகியவற்றால் கடல் வழித் தடங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
தடையற்ற கடல் வணிகம், பன்னாட்டுச் சட்டங்களின் அடிப்படையில் கடல்சார் தகராறுகளை அமைதியாகப் பேசித் தீர்ப்பது, பொறுப்புள்ள கடல்வழித் தொடர்பை ஊக்குவிப்பது, கடல்சார் போக்குவரத்துக்கு உள்ள அச்சுறுத்தல்களைக் கூட்டாக எதிர்கொண்டு முறியடிப்பது, கடல்சார் சூழலையும் வளங்களையும் காப்பது ஆகியன கடல்சார் பாதுகாப்புக்கான அடிப்படைக் கொள்கைகள் எனத் தெரிவித்தார்.