கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனாவாலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, அமித்ஷா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவிஷில்டு தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறினார்.
தங்களுக்கு நிதி நெருக்கடி எதுவும் இல்லை என்றும், மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது என்றும் தெரிவித்தார். அமெரிக்காவை சேர்ந்த நோவாவேக்ஸ் நிறுவனத்தின் கோவோவேக்ஸ் தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அக்டோபர் மாதமும், சிறுவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளும் அறிமுகப்படும் என்று அடார் பூனாவாலா தெரிவித்தார்.