இந்தியாவில் இருந்து வருபவர்கள் மீதான பயணத் தடைகளில் பிரிட்டன் தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி சிவப்பு பட்டியலில் இருந்து இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளை விடுவித்து அவற்றை ஆம்பர் எனப்படும் பொன்னிற பட்டியலில் பிரிட்டன் இணைத்துள்ளது.
இதனால் வரும் 8 ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு செல்பவர்கள் இனி 10 நாட்கள் ஹோட்டலில் கட்டாய குவாரன்டைனில் இருக்கத் தேவையில்லை. அதற்குப் பதிலாக பிரிட்டனுக்கு புறப்படுவதற்கு 3 நாட்கள் முன்னர் கொரோனா சோதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அங்கு சென்று அடைந்தவுடன் இரண்டு கொரோனா சோதனைகள் செய்வதற்கான முன்பதிவை பயணத்திற்கு முன்னதாக செய்து கொள்வது அவசியமாகும். அங்கு சென்ற உடன், பிரிட்டனில் எங்கு தங்கப்போகிறோம் என்ற தகவல் அடங்கிய படிவத்தை நிரப்பி அளித்தலும் அவசியமாகும்.
ஹோட்டல்களுக்குப் பதிலாக வீடுகள் அல்லது அவர்கள் தங்குமிடங்களில் 10 நாட்கள் குவாரன்டைனில் இருந்தால் போதுமானதாகும். 18 வயதிற்கு குறைவானவர்களும், பிரிட்டனில் முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் வீட்டு குவாரன்டைனில் இருக்க வேண்டிய அவசியமில்லை.