இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவப் படிப்பில் 27 சதவீத இட ஒதுக்கீடு, உள்ளிட்ட 5 முக்கிய அறிவிப்புகளை தேசிய கல்விக் கொள்கையின் முதலாண்டு நிறைவு நாளில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் 1986-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, புதிய தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது. தாய்மொழி வழியில் உயர்கல்வி, 4 ஆண்டு இளநிலை படிப்பு, கல்லூரியில் தேர்ந்தெடுத்த பாடத்தை பாதியிலேயே மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப் படுத்தி ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நேற்று உரையாற்றினார். அப்போது 5 முக்கிய அறிவிப்புகளை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார்
நடப்பாண்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பயிலும் மாணவர்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.இதே போன்று அகில இந்திய இடஒதுக்கீட்டு கொள்கையின்படி பொருளாதரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடங்களைத் தேர்வு செய்யும் வகையிலும் விரும்பாத பாடங்களில் இருந்து வெளியேறவும் பல்வேறு சலுகைகள் அளிக்கும் அகடாமிக் பேங்க் ஆப் கிரெடிட் என்ற திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார்.
கல்வியில் மொழி ரீதியான பிரிவினைகளைப் போக்க 11 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான சமிக்ஞை மொழிக்கும் இதர மொழிகளுக்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களும் மற்ற மாணவர்கள் போல கல்வியில் அங்கீகாரம் பெற இயலும்.
இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சிகள் அளிக்கும் ஏ 1 திட்டத்தையும் பிரதமர் மோடி நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.