வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம் மற்றும் மிசோராம் மாநில போலீசாருக்கும், இரு மாநில பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 6 போலீசார் கொல்லப்பட்டனர்.
அஸ்ஸாம் மற்றும் மிசோராம் மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் இருமாநில எல்லையில் அமைந்திருக்கும் கச்சார் மாவட்டத்தின் லைலாப்பூர் மற்றும் கோலாசிப் மாவட்டத்தின் வைரங்டே என்ற இடத்தில் திடீரென இரு மாநில பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருபுறமும் குவிந்த நூற்றுக்கணக்கான மக்கள் கற்களை வீசியும், கட்டை மற்றும் கம்பிகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதையறிந்த அஸ்ஸாம் மாநில போலீசாரும், மிசோராம் போலீசாரும் போராட்டத்தைக் கட்டுப்படுத்தச் சென்ற போது பொதுமக்களுக்கு இடையே நடந்த சண்டையானது இறுதியில் இருமாநில போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைப்பு சம்பவங்களும் அரங்கேறின. கூட்டத்தைக் கலைக்க இரு மாநில போலீசாரும் மாறி மாறி கண்ணீர் புகை குண்டுகளை வீசிக் கொண்டனர்.
இந்த மோதலில் அஸ்ஸாம் மாநில போலீசார் 6 பேர் கொல்லப்பட்டனர். 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்தனர். உயிரிழந்த போலீசாருக்கு அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார். இதனிடையே கலவரத்திற்கு அஸ்ஸாம் போலீசாரே காரணம் என்று மிசோரம் உள்துறை அமைச்சர் லால்சாம்லியானா குற்றஞ்சாட்டி உள்ளார். கடந்த ஆண்டும் கச்சார் மாவட்டத்தில் இரு மாநில பொதுமக்களும் மோதிக் கொண்டனர். அப்போது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதில் ஏராளமானோர் படுகாயடைந்தனர்.