அரசுக்கு எதிரானவர்களையும் செய்தியாளர்களையும் உளவு பார்க்க இஸ்ரேலின் உளவுச் செயலி பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை இந்திய அரசுடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தையில் எழுப்ப இருப்பதாக அமெரிக்காவின் ஜோ பைடன் அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கென், 2 நாள் பயணமாக வரும் செவ்வாய்க்கிழமை டெல்லி வருகிறார்.பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை அவர் சந்தித்து பேச்சு நடத்த உள்ளார். அப்போது இஸ்ரேல் உளவு சாதனம் பெகாஸஸ் மூலமாக நடைபெற்ற தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தை எழுப்ப இருப்பதாக ஜோ பைடன் அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணைச் செயலர் டீன் தாம்சன், இந்திய அரசு உளவு பார்த்ததாக கூறப்படும் பிரச்சினை குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிவித்தார்.
சட்டத்தை மீறி உளவுச் செயலியைப் பயன்படுத்தி எதிர்த்தரப்பை உளவு பார்க்கும் இதுபோன்ற பிரச்சினைகள் மிகுந்த கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார். இது போன்ற உளவு செயலிகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இவற்றை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியாவில் இப்பிரச்சினையுடன் மனித உரிமை மீறல் தொடர்பான பிரச்சினைகளையும் ஆன்டனி பிளிங்கென் இந்தியாவில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையில் எழுப்புவார் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு பொதுவான மதிப்பீடுகள் அதிகமான அளவு இருப்பதால் இப்பிரச்சினை குறித்து ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்தப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்த ஜோ பைடன் அரசு, ஆப்கானில் 40 ஆண்டுகளாக நடைபெறும் உள்நாட்டு யுத்தம் அமைதியான பேச்சுவார்த்தையின் மூலம் சுமுகத்தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.