அரசு அலுவலகங்களில் பணி நேரத்தின் போது ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் செல்போனை பயன்படுத்துவதற்கு மகாராஷ்டிர அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதுகுறித்து அம்மாநில பொது நிர்வாகத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அவசியத் தேவை என்றால் மட்டுமே மொபைல் போன்களைப் பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றபடி அலுவலகத்தில் உள்ள தரைவழித் தொடர்பு போன்களை மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அலுவலக நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது குறைக்கப்பட வேண்டும் என்றும், மொபைல் போன்கள் மூலம் குறுஞ்செய்திகள் அனுப்பிக்கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செல்போன்களில் உரையாடல்கள் குறைந்த சப்தத்திலும், கண்ணியமாகவும் இருக்க வேண்டும் எனவும் இயர்போன்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் பொது நிர்வாகத்துறை குறிப்பிட்டுள்ளது.